சமீபத்திய ‘மன் கி பாத்’ உரையில், வரும் பண்டிகை காலத்தில் காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களில் குறைந்தது ஒன்றையாவது வாங்கி உள்ளூர் கலைஞர்கள், நெசவாளர்களை ஆதரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஜூலை 26 ‘கார்கில் வெற்றி தினம்’ எனக் குறிப்பிட்ட அவர், இந்த நாள் நாட்டை பெருமிதத்தால் நிரப்புவதாகவும், இந்திய படைவீரர்களின் துணிச்சலை நினைவூட்டுவதாகவும் கூறினார். வீரமரணமடைந்த தியாகிகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
மேலும், ஐஎன்எஸ் மகேந்திரகிரி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதாகவும், அதன் 75 சதவீதத்திற்கும் அதிகமான கூறுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை எனவும் தெரிவித்தார்.
அதேபோல், டி.ஆர்.டி.ஓ ‘குஷா’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கூறிய அவர், இத்தகைய முன்னேற்றங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், கைத்தறிக்கு ஊக்கம் அளிப்பதால் பலரின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என்றும் அவர் கூறினார்.





