பொதுமக்களை “தூணிலிருந்து தூணுக்கு” அலைக்கழிக்கக் கூடாது; சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் மக்கள் சிரமப்படாத வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மும்பை நாரிமன் பாயின்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசினார். ஐஆர்எஸ் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், மக்களின் பிரச்னைகளை உணர்ந்து கொள்ள அனுபவம் உதவும் என்றும் கூறினார்.

அரசுத் துறைகள் மெத்தனமாக செயல்படுவது குடிமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, பொதுச் சொத்துகளின் நிர்வாகத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இத்தகைய மோசமான நிர்வாகம் பொதுச் சொத்துகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலையை உருவாக்கும் என்றும், பொதுச் சேவையில் நேர்மை முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில் விதிகளை மீறவோ, யாருக்கும் சாதகமாக நடக்கவோ வேண்டியதில்லை; சட்டப்படி கிடைக்க வேண்டிய நன்மைகள் மற்றும் உரிமைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.