திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் தொடர்பான மோசடி புகாரை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மடம் நிலத்தை ஆக்கிரமித்து கடை நடத்தியவர்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
புகாரின் விவரப்படி, பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள மடத்தின் நிலம் (சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது) நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை உறுப்பினர் முருகதாஸ் உள்ளிட்ட பலரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பதிவுத் துறை சார்ந்தவர்களிடமிருந்தும் ஆவணங்கள், சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக, 1880 முதல் மடம் நிலம் தொடர்பாக நடந்த வழக்குகள், ஆக்கிரமிப்புகள், அதில் தொடர்புடையவர்கள், ஆவணங்களில் கையெழுத்திட்ட சாட்சிகள், நிலத்தில் வணிகக்கடை நடத்தியவர்கள், வணிக அனுமதி வழங்கியவர்கள் ஆகிய விவரங்களையும் போலீசார் பரிசீலித்தனர். மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு எந்த ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதையும் விசாரித்தனர்.
இதற்கிடையில், மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசின் அடிப்படையில் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் சிபிசிஐடிக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்ற நடைமுறை தொடர்பாகவும், வழக்கு மற்றும் ஆவணப் பதிவுகளில் கையெழுத்திட்ட சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.





