புதுடில்லி: குடும்ப தகராறுகளின் பின்னணியில் கணவர் வீட்டார் மீது பழிவாங்கும் நோக்கில் குற்ற வழக்குகள் தொடரும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்குரியது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது. இரட்டை குழந்தைகள் தந்தையின் பராமரிப்பிலேயே வாழலாம் என்றும், தாய்க்கு குழந்தைகளை சந்திக்கும் உரிமை வழங்கப்படும் என்றும் குடும்ப நல நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.

இதற்குப் பிறகு, தன் மகனை தந்தை வழி அத்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாய் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, 2023-ல் பரஸ்பர சம்மத விவாகரத்து பெற்ற போது அல்லது அதற்கு முன்பு இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டது. மேலும், மனைவி தரப்பு உறவினர்கள் மீது கணவர் போலீசில் புகார் அளித்த சில மணி நேரங்களுக்குள் கணவரின் சகோதரி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியது.

முதல் தகவல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்றும், நீதிமன்ற நடுவர் முன் பதிவு செய்யப்பட்ட சிறுவனின் வாக்குமூலத்திலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறிய நீதிமன்றம், வழக்கை தொடர முகாந்திரம் இல்லை எனத் தீர்மானித்தது. இதனால், அத்தைக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டு, தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது. குடும்ப தகராறுகளில் குழந்தைகளே சில நேரங்களில் கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் எச்சரித்தது.