ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி, காலை மற்றும் மாலை என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். முதல்நாளில் இருவரும் ஆஜராகி கையெழுத்திட்டதுடன், சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆடியோ பதிவுகள் மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல். இன்றைய விசாரணை முடிந்ததும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விசாரணை இன்னும் நடுப்பகுதியில் இருப்பதாக கூறி, முடிந்த பிறகு அனைத்தையும் தெரிவிப்பதாகச் சொல்லி செந்தில் பாலாஜி புறப்பட்டுச் சென்றார்.