சென்னை: டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன வகையைப் பொறுத்து ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 7,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 66 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் கட்டண மாற்றம் செய்யப்படும்; மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் மாற்றம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு மே 23 முதல் அமலுக்கு வந்தது. தற்போது செங்கல்பட்டு அருகே பரனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மொத்த விலை குறியீடு (WPI) சார்ந்த கணக்கீட்டில் கட்டணத்தை குறைத்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில், முந்தைய WPI அடிப்படையிலான கணக்கீட்டை மீண்டும் பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஜூன் 29 அன்று அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு பழைய முறையை மீண்டும் அமல்படுத்தியது என்றனர்.
இதன் விளைவாக, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒருமுறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் மீண்டும் உயர்ந்துள்ளது. மே மாதத்திற்குப் பிறகு இது இரண்டாவது உயர்வாகும்; அனைத்து சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும். மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 இலிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.





