நடப்பு நிதியாண்டில் ஏப். முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில், மூலதன திட்டங்களுக்காக தமிழக அரசு ரூ.20,881 கோடி கடன் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில், நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கு ரூ.14,618 கோடி வட்டி செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தக வரிகள் உள்ளிட்ட பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்ற செலவுகள் வரவை விட அதிகமாகும் போது, கடன் பத்திரங்கள் விற்பனை மற்றும் வங்கிக் கடன் போன்ற வழிகளில் நிதி திரட்டப்படுகிறது.

அரசுக் கடன் பத்திரங்கள் விற்பனை வழியாக பெறப்படும் கடன்தான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிதி சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த கடன் ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடியாக உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

முழு நிதியாண்டில் ரூ.1.22 லட்சம் கோடி கடன் பெறவும், வட்டிக்காக ரூ.76,452 கோடி செலவிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் வட்டி செலவின் பங்கு 22.82% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.