தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றி, புதுப்பித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அமலோற்பவம் லூர்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி சாதனையாளர் பாராட்டு விழாவில் அவர் பேசினார். பாடத்திட்டக் குழுத் தலைவராக விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை நியமித்துள்ளதாகவும் கூறினார்.
கணிதத்தை கதைகள் வழியாக கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வண்ணப் படங்கள் மற்றும் வரைபடங்கள் நிறைந்த வகையில் பாடப்புத்தகங்களை மாற்றி அமைத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மட்டுமல்ல, இயற்கை நுண்ணறிவையும் வளர்க்கும் வகையில் கற்றுத்தரப்படும் என்றார். பல இடங்களில் AI அறிமுகப்படுத்தப்படுகிற நிலையில், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத்தர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் பல பள்ளிகளில் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அடுத்தடுத்த வகுப்புகளில் AI உடன் இயற்கை நுண்ணறிவை வளர்க்கும் பாடப்பொருட்களும் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





