வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பல குடும்பங்கள் தங்களின் வாங்கும் முறையையும் உணவுத் தேர்வுகளையும் கணிசமாக மாற்றிக் கொண்டுள்ளன.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, வீட்டில் சமைப்பதற்காக வாங்கும் உணவுப் பொருட்களின் விலை தற்போது 33% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தொடரும் விலைவாசி உயர்வால், பிடித்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது மற்றும் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளன.
பலரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் முன் செயலிகள் மூலம் எங்கு விலை குறைவாக உள்ளது, எந்த சலுகைகள் கிடைக்கின்றன என்பதை ஆராய்ந்து பின்னரே வாங்குகின்றனர். விலை உயர்ந்த பிராண்டட் பொருட்களுக்கு பதிலாக மலிவான மாற்றுப் பொருட்களை தேர்வு செய்வதும் அதிகரித்துள்ளது.
மாட்டிறைச்சியின் விலை 2019 உடன் ஒப்பிடுகையில் சுமார் 79% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் இறைச்சி வாங்குவதை குறைத்துள்ளன; சிலர் முற்றிலும் தவிர்த்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, தொடர்ச்சியான விலை உயர்வை சமாளிக்க அமெரிக்க குடும்பங்கள் தனித்தனியாக சிக்கனத் திட்டங்களை வகுத்து செலவுகளை நிர்வகித்து வருகின்றன. சர்வதேச புவிசார் அரசியல் மோதல்களால் அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் பாதிக்கப்பட்டதும், காபி, பழங்கள், கடல் உணவுகள் போன்ற இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரிகளும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.





