ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள பழமையான சொகுசு பங்களா ஒன்றில் நடந்த சீரமைப்பு பணிகளின்போது, பிளம்பர் ஒருவர் ரூ.23 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள் அடங்கிய புதையலை கண்டெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அடித்தளத்தில் உள்ள சிமென்ட் தரையில் இருந்து ஒரு கயிறு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அதை சாதாரணமாக விட்டுவிடாமல், கயிறு எங்கிருந்து வருகிறது என்பதை அறியத் தோண்டத் தொடங்கினார்.
தோண்டியபோது தரையின் கீழ் துருப்பிடித்த பழைய இரும்புப் பெட்டி ஒன்று புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பெட்டியைத் திறந்தபோது, அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள பளபளக்கும் தங்கக் காசுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தங்கக் காசுகள் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதற்கு முன் மற்றொரு தொழிலாளி கயிறை பார்த்தும் அலட்சியமாக விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரிய சட்டப்படி இவ்வகை புதையல் கிடைத்தால், அதன் மதிப்பை கண்டெடுத்த நபரும் அந்த நிலத்தின் உரிமையாளரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.





