தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். மேற்கத்திய நாடுகளில் “தவறான விஷயங்கள்” நடைபெறுவதாகவும், அது முழுமையற்ற கொள்கை அடிப்படையில் உருவான போக்குகளால் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அந்நாடுகளிடம் அதற்கான தீர்வு இல்லை என்பதால் பல பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பழமையானவை அனைத்தும் மதிப்பற்றவை என்ற எண்ணத்தை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நம்மிடம் உருவாக்கியதாகவும், அதனால் நமது அமைப்பை நாம் மறந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உருவாகும் போக்குகளின் தாக்கத்தை உணர்ந்து, விழிப்புடன் நடக்க பழக வேண்டும் என வலியுறுத்தினார்.
மேற்கில் “யார் உயர்ந்தவர்” என்ற விவாதங்கள் இருப்பதாகச் சொல்லி, ஆண் உயர்ந்தவரா அல்லது பெண் உயர்ந்தவரா என்ற வாதங்களை எடுத்துக்காட்டினார். ஆணோ பெண்ணோ தனியாக அனைத்தையும் செய்ய முடியும் என்பது மாயை என்றும், ஏதாவது செய்ய வேண்டுமெனில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த சமூகங்கள் குறித்து பேசுகையில், சில போக்குகள் இயற்கையாகவே அமைந்தவை என்றும், சில மனநிலை மாற்றங்கள் அல்லது உடல் ரீதியான ஈர்ப்புகளால் பிற்காலத்தில் உருவாகலாம் என்றும் தெரிவித்தார். இத்தகைய நிலை உலகம் முழுவதும் இருப்பதால் இந்தியாவில் மட்டும் இல்லை என்று சொல்ல முடியாது என்றும், நம்மிடையேயும் இத்தகையவர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கான ஏற்பாடுகளை அமைதியான முறையில் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.





