தமிழ்நாட்டின் மதுரை மற்றும் கோவையில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) மத்திய அரசால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. நீளத்தில் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ அமைக்க, அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை ஒரு வழித்தடமும், உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வழியாக வலியம்பாளையம் பிரிவு வரை மற்றொரு வழித்தடமும் முன்மொழியப்பட்டது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. நீளத்தில் மெட்ரோ திட்டம் திட்டமிடப்பட்டது. இதில் சுமார் 27 கி.மீ. உயர்மட்டப் பாதையில் 23 நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப் பாதையில் மூன்று நிலையங்களும் அமைக்க முடிவானதாக கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்த DPR-களை மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. மதுரை திட்டம் ரூ.11,360 கோடி, கோவை திட்டம் ரூ.10,740 கோடி என செலவுக் கணிப்பு குறிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை; ஆனால் இரு நகரங்களிலும் சுமார் 15 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என்ற காரணத்தால் மத்திய அரசு அறிக்கைகளை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டதுடன், DPR-களில் திருத்தம் செய்து கடந்த மே மாதம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், மக்கள்தொகை போதாது; மெட்ரோ அமைத்தாலும் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைய வாய்ப்பில்லை எனக் கூறி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது. மாற்றாக, பஸ்களுக்கு மட்டும் பிரத்யேக வழித்தடம் அமைத்து இயக்கும் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (BRTS) மேம்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இரண்டாவது முறையாக மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.