ஹாங்காங்கில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை–ஹாங்காங் இரு மார்க்க கேத்தே பசிபிக் விமான சேவை சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணியர் அவதியடைந்தனர்.
விமான நிலையத் தகவலின்படி, 217 பயணியருடன் கேத்தே பசிபிக் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 11:50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அதே விமானம் நள்ளிரவு 12:50 மணிக்கு 220 பயணியருடன் ஹாங்காங் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘தைபூண் நவுல்’ புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக ஹாங்காங்கின் வானிலை மையம் எச்சரித்ததால், பாதுகாப்பு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து ஹாங்காங் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு இன்று வர இருந்த கேத்தே பசிபிக் விமானமும் புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னை–ஹாங்காங் இணைப்பை பயன்படுத்தி லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், சீயோல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த பயணியரும் பாதிக்கப்பட்டனர்.
புயல் தாக்கம் குறைந்ததும் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், நாளை அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஹாங்காங் புறப்பட வாய்ப்பு இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.





