எத்தனால் கலந்த எரிபொருள் தொடர்பாக இணையத்தில் தன்னை குறிவைத்து அவதூறு பரப்பியதாகக் கூறி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் பதற்றங்களால் ஏற்பட்ட விநியோகக் கவலைகள் போன்ற காரணங்களால், 20% எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த பின்னணியில், இ20 திட்டம் மற்றும் அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் சில பதிவுகள் பரவியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும் லாபம் அடைவதாகக் கூறி அவதூறு குற்றச்சாட்டுகள் மற்றும் டீப்பேக் வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் மெட்டா, எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடுக்க அனுமதி கோரி கட்காரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கட்காரி தரப்பு வழக்கறிஞர் சந்தீப் எஸ். லட்டா முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நீதிபதி அபய் அஹுஜா அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.