ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யு. சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், மாநிலத்தின் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர் சகாயம். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்ட ஆணையராக செயல்பட்டு, கிரானைட் குவாரிகளில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராக முடியவில்லை என கூறி, பாதுகாப்பு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஜூலை 27 அன்று நடந்த விசாரணையில், முன்அறிவிப்பு இல்லாமல் தன்னிடம் இருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக அவரது தரப்பு தெரிவித்தது.
இதற்கு போலீசார், பாதுகாப்பு கோரிய மனு மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருப்பதாக விளக்கம் அளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.





