கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது சொத்து தொடர்பான சில விவரங்களை மறைத்ததாகக் கூறி, திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளை தொடர்பான தகவல்கள் மற்றும் சில சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் திருஞானசம்பந்தன் கோரியுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தொடர்புடைய ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கியது. மேலும், வழக்கு விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





