2025ம் ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி நியமனங்களை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் தமிழக அரசு தரப்பில், 31 பேருக்கு பணி வழங்கியது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒப்புதல் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தரப்பிலும் தங்களது அனுமதி தேவையில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றை பரிசீலித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், வழங்கப்பட்ட அரசுப்பணி நியமனங்களை ரத்து செய்தனர். தீர்ப்பில், அரசு வேலை வழங்குவதற்குப் பதிலாக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் சுய தொழில் முனைவோராக மாற்றுவது பயனுள்ளதாக இருக்கலாம் என்றும், கருணை அடிப்படையில் வேலைக்காக பலர் காத்திருக்கும்போது இந்தச் சம்பவத்திற்கு ஏன் முன்னுரிமை என்பதையும் நீதிமன்றம் கேள்வியாக முன்வைத்தது.