மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 75 வயது வைர வியாபாரி, சுமார் மூன்று மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க குடும்பத்தினர் ரூ.44 கோடி அளிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் தார் பகுதியைச் சேர்ந்த ரமணி, 1980களிலிருந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர். பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய அவர், சர்வதேச வைர வர்த்தகத்திலும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாலி தலைநகர் பமாக்கோவில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தை அவர் வாங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் பமாக்கோவில் தங்கியிருந்தபோது, உள்ளூர் கடத்தல் கும்பல் அவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. விடுவிக்க ரூ.100 கோடி தர வேண்டும் என கடத்தல்காரர்கள் முதலில் மிரட்டிய நிலையில், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இறுதியாக ரூ.44 கோடி அளிக்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதையடுத்து அவர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் இன்னும் மாலி நாட்டிலேயே வைத்திருக்கப்படுவதாகவும், அந்நாட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





