போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், 2024-ல் கொண்டு வரப்பட்ட “பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம்” மீது திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதாவை ஜூலை 27-ம் தேதி லோக்சபாவில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். அவை அமளிக்கிடையே மசோதா அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களின்படி, தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை மூன்று ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக உயர்த்தப்படுவதுடன், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் குற்றங்களுக்கு அபராதம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

வினாத்தாள் கசிவை வலையமைப்பாக நடத்தும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை ஐந்து ஆண்டிலிருந்து ஏழு ஆண்டாகவும், குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட உள்ளது. தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகள் புகாரில் சிக்கினால் ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கவும், பொதுத் தேர்வுகளை நடத்தும் தடை காலத்தை இரட்டிப்பாக்கி 8 ஆண்டுகள் வரை தடை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க காலவரையறை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன், அவற்றின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடுகளை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யலாம்; அந்த மேல்முறையீடுகளும் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.