லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகம் வந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1 வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், 2029 லோக்சபா தேர்தலை முன்னிட்டு ‘பூத் கமிட்டி’ நிர்வாகிகளை உருவாக்குதல், தேர்தல் உத்தி உள்ளிட்ட அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிறைவு நாளில் ராகுல் பங்கேற்று மாவட்டத் தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கி மக்களுடன் கலந்துரையாடும் திட்டமும் பேசப்பட்டாலும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த பயணத்தின் போது சென்னையில் முதல்வர் விஜயை ராகுல் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அல்லது நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாமல்லபுரத்தில் நடந்த முகாமில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் பங்கேற்று மாவட்டத் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ஆகஸ்ட் 1ம் தேதி ராகுல் முகாமில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியதுடன், மாணவர் போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது; அது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.