ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் 126 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் 160 கிலோவும் தூக்கி மொத்தம் 286 கிலோ எடையை பதிவு செய்தார்.

இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வெற்றி குறித்து ராஜா முத்துப்பாண்டியின் தாய் பேச்சியம்மாள் பேசுகையில், “தெய்வத்திடம் வைத்த பிரார்த்தனையும், மகனின் கடினப் பயிற்சியும் அவனை கைவிடவில்லை” என்று உருக்கமாக தெரிவித்தார். மகனின் விளையாட்டு பயணத்திற்காக தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய தினக்கூலி வேலை செய்து வந்ததாகவும் கூறினார்.

முன்னதாக ஜப்பான், மலேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று 7 பதக்கங்கள் பெற்றதாகவும், 2018 காமன்வெல்த் போட்டியில் 6-ஆம் இடம் பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும் 2022-ல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

குடும்ப சூழலைப் பற்றி கூறிய பேச்சியம்மாள், ராஜாவின் தந்தை ரோடுமேன் பணியில் இருப்பதாகவும், தாம் தீப்பெட்டி தொழிற்சாலையில் இரண்டு ஷிப்ட் வேலை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர முயன்றதாகவும் கூறினார். “பயிற்சியை விடக்கூடாது” என்று மகனை ஊக்கப்படுத்தியதாகவும், இன்று பதக்கம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.