அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற பிரபல உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியாட்டில் சென்டர் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெறும் ‘பைட் ஆப் சியாட்டில்’ உணவுத் திருவிழா நடந்து வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 3.5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

திருவிழாவில் இருந்தவர்களை நோக்கி சில மர்ம நபர்கள் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சியாட்டில் சென்டர் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.