டில்லியில் நடைபெற்ற போராட்டங்களை எதிர்கொள்ளும் போது போலீசார் பலத்தை பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையான கருத்துகளை தெரிவித்தது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
நீட் வினாத்தாள் கசிவு குறித்த எதிர்ப்பை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், தடியடி நடத்தப்பட்டதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இந்த விசாரணைக்கு வந்தன.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா) போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே தடியடி நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போலீசார் வரம்பு மீறி பலத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டது.
மேலும், போராட்டங்களை போலீசார் கையாள்வது தொடர்பாக தேசிய அளவில் வழிகாட்டுதல்கள் தேவை என அமர்வு கருத்து தெரிவித்தது. மாணவர்கள் மட்டுமின்றி பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் உட்பட ஒவ்வொரு தனிநபரின் உயிரும் சமமான முக்கியத்துவம் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர்கள் மீது நடந்ததாக கூறப்படும் தடியடி சம்பவம் தொடர்பான மனுக்கள் மீது நாளை (செவ்வாய்க்கிழமை) மேலும் விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது.





