ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளதுடன், புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 27 அன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஜூலை 28 மற்றும் 29 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், ஜூலை 30 அன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை 31 அன்று கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 மற்றும் 2 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.