சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், நீராதாரங்கள் குறைந்து வருவதை அறிந்தும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் தமிழக குடிநீர் வாரியம் செயலற்ற நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் மற்றும் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறைகளின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், மாநிலத்தின் பல அணைகள் மற்றும் ஏரிகள் வறண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்வளத்துறை பராமரிப்பிலுள்ள 90 அணைகளில் 59 அணைகள் வறண்டுள்ளதாகவும், மேலும் 16 அணைகளில் 25% முதல் 50% வரை மட்டுமே நீர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாசன ஏரிகளில் 3,489 முழுமையாக வறண்டு கிடக்க, 6,158 ஏரிகள் வறண்டு விடும் நிலையை எட்டியுள்ளன. ஆறுகள், அணைகள், ஏரிகளை ஆதாரமாகக் கொண்டு பல மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
மேற்பரப்பு நீர்நிலைகள் வறண்டதுடன் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வராததால், நீண்ட நேரம் மோட்டார் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு மின்சாரச் செலவும் உயர்வதாக கூறப்படுகிறது. பல இடங்களில் வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாமக்கல், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை மூலம் நீராதார நிலவரம் குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தும், மாற்றுத் திட்டங்களை தொடங்காமல் மவுனம் காக்கப்படுவதாகவும் புகார் கூறுகிறது.




