ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் காட்டிய வழியை முன்னுதாரணமாக கொண்டு ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கலாம் நினைவு நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் தேசிய நினைவகத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ‘அப்துல் கலாம் பவுண்டேஷன்’ சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, தமிழக மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு அரசியல் நெறிமுறை, செயல்முறை மற்றும் கட்டுப்பாடு குறித்து பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். பயிற்சி முகாம் தொடர்பான அறிவிப்பு கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
கலாமின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அண்ணாமலை, ராக்கெட், ஏவுகணை உள்ளிட்ட துறைகளில் நாட்டின் விண்வெளி மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர் முன்னோடியாக இருந்ததாக கூறினார். மேலும், வெவ்வேறு அரசியல் கருத்துகள் கொண்ட எட்டு பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்ததாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலாம் வழியை பின்பற்றி உழைத்தால் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நாடு மேலும் வலுப்படும் என்றும் தெரிவித்தார்.





