மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா முன்வைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மேகதாது அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த பதில் ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
காவிரியில் கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டமும், அவர்களின் ஒப்புதல் இன்றி செயல்படுத்த முடியாது என முதல்வர் தெரிவித்துள்ளார். காவிரி நீரை சார்ந்த மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காவிரி மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பும் உள்ள நிலையில் கர்நாடகா அணை கட்ட முடியாது என அவர் வாதிட்டுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் காக்க பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.





