மும்பை: பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் சட்டத் தேவைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்ற காரணத்தால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. வாரத்திற்கு 35 மணி நேரமே நிலையான வேலை நேரமாகக் கருதப்படும் நிலையில், தினசரி மற்றும் வாராந்திர ஓய்வு நேரங்கள், கூடுதல் நேர வேலை மற்றும் அதற்கான ஊதியம் போன்றவை சட்டப்படி துல்லியமாக பதிவாக வேண்டும்.
இந்த நிலையில், பிரான்சில் இயங்கும் இன்போசிஸ் கிளையில் ஊழியர்களின் வேலை நேரத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் டிஜிட்டல் அமைப்பில் மூன்று முக்கிய குறைபாடுகள் இருப்பதாக அந்நாட்டு பிராந்திய தொழிலாளர் நல ஆணையம் குறிப்பிட்டுள்ளது. உள்நுழைவு–வெளியேறும் நேரங்கள் துல்லியமாக பதிவாகாதது, ஆய்வுக்குத் தேவையான ஆதாரங்கள் போதாமை, மேலும் சில பிரிவு ஊழியர்களின் கூடுதல் பணிநேரத்தை மென்பொருள் முறையாக கண்காணிக்க முடியாதது ஆகியவை குற்றச்சாட்டுகளாக தெரிவிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இது நிறுவனத்தின் பங்கு சந்தை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த அபராதம் நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடுகள் அல்லது பிற வணிக நடவடிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இன்போசிஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.





