சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி விசாரணை நடத்த கோரிய மனு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில், ஸ்டாலின் தி.மு.க. அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பது மற்றும் அந்த அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் ரூ.2.27 கோடிக்கு சொத்து வாங்கிய விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனை பரிசீலித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் வேட்பு மனுவில் அறக்கட்டளை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எந்த தகவல்கள் மறைக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை நீதிபதிகள் கேட்டனர். மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அவை தமிழில் இருந்ததால் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 29க்கு தள்ளிவைத்தனர்.