புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி, வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.

பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்களாக நீடித்த போராட்டத்தை அக்கட்சி சமீபத்தில் வாபஸ் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறியதாக குற்றஞ்சாட்டிய கட்சியினர், கபில் சிபலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பில், சட்ட உதவிக்காக ரூ.1 கோடி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் உதவ முன்வந்து தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கபில் சிபல் கேட்டுக் கொண்டார்.