சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. அதில், மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மட்டும் வர வேண்டும்; பணத்துடன் வந்தால் உள்ளே அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ்கள், நில அளவை போன்ற பணிகளுக்காக வரும் மக்களிடம் சிலர் லஞ்சம் கேட்பதாகவும், இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்தப் பின்னணியில், மானாமதுரை தாசில்தாராக பணியாற்றும் கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், புரோக்கர் நடமாட்டத்தை குறைக்கவும், அதிக பணத்துடன் வருபவர்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகைகளிலும் அலுவலக சுற்றுச்சுவர்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு ஊழியர்கள் ‘எதற்காக வந்தீர்கள், பணம் வைத்துள்ளீர்களா’ எனக் கேட்டு பின்னர் உள்ளே அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.