மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுடன் தொடர்புடைய அறக்கட்டளையின் சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள சொத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 420 (மோசடி) மற்றும் 120(B) (கூட்டுச் சதி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு அமைப்பான அறப்போர் இயக்கம் அளித்த புகாரும் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வர உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1930-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், இரு கோவில்களுக்கும் சேவை செய்ய உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது. உயில் நிபந்தனைகளின்படி, அந்தச் சொத்தை வாடகைக்கு விட மட்டுமே அனுமதி; விற்பனை, அடமானம் அல்லது உரிமை மாற்றம் செய்ய அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 2016 ஜூன் 24 அன்று, மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கோவில் பெயரில் இருந்த உரிமையை நீக்கி ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அந்த உத்தரவை ரத்து செய்து, இது கோவில்களுக்குச் சொந்தமான அறக்கட்டளை சொத்து என உறுதி செய்து, மீண்டும் கோவில் பெயரிலேயே பட்டா மாற்ற உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடையாணையும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தத் தடையை மறைத்து, 2021 ஏப்ரல் 16 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 2021 ஜூலை 19 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமானப் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும் எப்ஐஆர்-ல் கூறப்பட்டுள்ளது. பட்டா மாற்றம், பத்திரப்பதிவு மற்றும் அடமானப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டுச் சதி நடந்ததாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், சிசிபி போலீசார் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





