புதுடில்லி: காவிரி ஆற்றின் குறுக்கே முன்மொழியப்பட்ட மேகதாது அணையை கட்ட தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவையில்லை என மத்திய அரசு பார்லிமென்டில் தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் பா.ம.க. தலைவர் மற்றும் எம்.பி. அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை திட்டத்திற்காக தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா என்றும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி, காவிரி நீர் விவகாரத்தில் 2018 பிப். 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றார்.

மேலும், 2019-ல் கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை (DPR) சமர்ப்பித்ததாகவும், ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருத்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டதால் அந்த அறிக்கை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.