சென்னை: தலைமைச் செயலகத்தில் கோட்டை பாரம்பரிய கட்டடத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி, அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் 2024ஆம் ஆண்டு அந்த அறை பொதுப்பணித் துறையினரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், புதிய மின்விளக்குகள், சோபா, நாற்காலி, மேஜை, ஏ.சி. உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் ரூ.1 கோடி செலவில் பணிகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் புனரமைப்பு பணியில் பொதுப்பணித் துறையினர் இறங்கியுள்ளதாகவும், அறையில் இருந்த மின்விளக்குகள், பிளைவுட், செயற்கை மேற்கூரை, மின்சாதனப் பொருட்கள், ஏ.சி. உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான சர்ச்சையில் அமைச்சர் பெயர் அடிபட்டதற்கு அறையின் வாஸ்து அமைப்பு சரியில்லாததே காரணம் என ஜோதிடர்கள் கூறியதாகவும், இனி பிரச்னைகள் வராமல் இருக்க திசை பார்த்து மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.

இத்தகைய பராமரிப்பு அல்லது மாற்றுப் பணிகளை மேற்கொள்ளும் முன் பொதுப்பணித் துறை வழியாக ஒப்பந்தம் கோர வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அதை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி பணிகள் நடப்பதாக கூறப்படுவது தலைமைச் செயலகத்தில் விமர்சனத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.