புதுடில்லி: டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ) எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜ தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியினர் முதல் முறையாக இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தேர்வு மற்றும் நியமன முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக தொடர்கிறது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பல நாடுகளுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்தபோது, விவசாயிகளின் நலனில் அரசின் கவனம் இருப்பதும் எடுத்துரைக்கப்பட்டதாக ரிஜிஜூ கூறினார்.