அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.)யில் தடயவியல் தணிக்கையாளரையும் சேர்க்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து மாநில அரசு அமைத்த எஸ்.ஐ.டி., விசாரணையின் ஒரு பகுதியாக கோவில் ஊழியர்கள் எட்டு பேரை பிடித்து, அவர்களிடமிருந்து கோவில் பணத்தையும் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நன்கொடை முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதியை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணையில், ஜூலை 25-ஆம் தேதி போலீஸ் ஐ.ஜி. கிரண் தலைமையில் நான்கு பேர் கொண்ட புதிய எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. விசாரணை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், தடயவியல் தணிக்கையாளரை இணைக்கவும், தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நிலவரம் குறித்து இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யச் சொல்லி வழக்கை ஒத்திவைத்தனர்.