நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து டில்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சுப்ரீம்கோர்ட் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களின்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டது, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அதே நேரத்தில், போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் தரப்பிலான மனுவும் பரிசீலிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றப் பின்னணி இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; இளைஞர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்றும் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. போராட்டங்கள் நடந்ததாக குறிப்பிடப்பட்ட மஹாராஷ்டிரா, பீஹார், உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.