மனிதக்கழிவுகளை கைமுறையில் அகற்றும் நடைமுறையைத் தடை செய்த உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
டாக்டர் பல்ராம் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னை, டில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய ஆறு பெருநகரங்களில் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை கைகளால் சுத்தம் செய்வதை ஏற்கனவே தடை செய்ததையும், இயந்திரப் பயன்பாட்டை உறுதிப்படுத்த விரிவான உத்தரவுகள் வழங்கியதையும் நினைவூட்டியது.
அத்தகைய உத்தரவுகள் இருந்தும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என புதிய மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நாட்டின் பல பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழப்புகள் தொடர்வது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2024-ல் 54 பேரும், 2025-ல் 46 பேரும் கழிவுநீர் தொட்டிகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளையும் அமர்வு சுட்டிக்காட்டியது.
தமிழகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை எனக் கூறிய நீதிமன்றம், உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக தலைமைச் செயலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என கேட்டது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தேவையெனில் தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராக அழைக்க நேரிடலாம் என்றும் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.





