தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க, ஆறு பேர் அடங்கிய ஆலோசனை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமை வகிக்கிறார்.

அரசின் நிதிநிலை குறித்த சமீபத்திய வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் சுரங்கங்கள், கனிமங்கள் போன்ற துறைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட முக்கிய வருவாய் ஆதாரங்களில் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. மேலும் மாநிலம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மற்றும் பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான அலுவாலியாவுடன், டில்லி தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் கிருஷ்ணன், சர்வதேச நிதியத்தின் நிதி விவகாரத் துறையின் பொருளாதார நிபுணர் அரவிந்த் மோடி, மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய முன்னாள் தலைவர் நஜிப் ஷா, தமிழக அரசின் நிதித்துறை செயலர் சித்திக், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன உறுப்பினர் சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் வரியில்லாத வருவாயை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும். வருவாய் வசூல் துறைகளில் முறைகேடு, வரி ஏய்ப்பு, நிர்வாக குறைபாடு ஆகியவற்றை தடுப்பதற்கும், வருவாய் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைத்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.