திருப்பூர் இடுவம்பாளையம் அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நீட் தேர்வில் சாதித்து மருத்துவக் கல்லூரி கனவை நனவாக்கியுள்ளனர். எளிய குடும்பப் பின்னணி, வறுமை, உடல்நலக் குறைவு, சமூகத்தின் எதிர்மறை பேச்சுகள் போன்ற தடைகளைத் தாண்டி வந்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்தனர்.
மாணவி ஜோஷிகா, ஐந்தாம் வகுப்பிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு இருந்ததாகவும், அதற்கான சரியான வழிகாட்டுதலை பள்ளி ஆசிரியர்களே வழங்கியதாகவும் கூறினார். பெண் குழந்தைகள் அதிகம் என்பதைக் காரணமாக்கி படிப்பை நிறுத்தச் சொன்னவர்களையும் பெற்றோர் பொருட்படுத்தாமல் ஆதரித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
மாணவர் சுசிதரன், வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி, சனி–ஞாயிறுகளில் நீட் சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பள்ளிப் பாடப்புத்தகங்களை முழுமையாகப் புரிந்து படித்து, சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்தினால் நீட்டில் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.
மாணவர் மவுனீஷ், 10-ஆம் வகுப்பு வரை படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லாமல் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும், 11–12-ஆம் வகுப்புகளில் தீவிரமாக மாறியதாகவும் சொன்னார். ஆசிரியரின் ஊக்கமும், பள்ளியின் மூத்த மாணவருடன் பேசியதும் நீட் தயாரிப்புக்கு தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை படித்து சமூக வலைதளங்களைத் தவிர்த்ததாகவும் கூறினார்.
மாணவி பவித்ரா, தந்தை இல்லாத சூழலில் தாயின் தியாகத்துடன் வளர்ந்ததாகவும், நீட் பயிற்சி காலத்தில் கடுமையான ஆஸ்துமா காரணமாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தாலும் முயற்சியை விடவில்லை என்றும் தெரிவித்தார். மாணவி மகாலட்சுமி, தமிழ் வழியில் படித்தாலும் மொழி தடையல்ல; தொடர்ந்து முயன்றால் வெற்றி சாத்தியம் என வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவே தங்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்றார்.





