தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் மற்றும் எம்-சாண்ட் போன்ற கட்டுமான கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்குள் கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை இயற்கை வளங்கள் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாநில எல்லைக்கு அப்பால் கனிமப் போக்குவரத்தை முறைப்படுத்தவும், தற்காலிக தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு பெருமளவில் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால் மாநிலத்தில் பற்றாக்குறை மற்றும் செயற்கையான விலையேற்றம் உருவாகி, உட்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பணிகள் பாதிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தி மாநிலத்திற்குள் வினியோகத்தை நிலைநிறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டவிரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளின் அதிகாரங்களை மேற்கோள் காட்டி, சுற்றுச்சூழல் மீறல்கள் மற்றும் சட்டவிரோத கனிமப் போக்குவரத்தையும் தடுக்க இந்த தடை உதவும் என அரசு தெரிவித்துள்ளது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எல்லை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தடை உடனடியாக அமலுக்கு வருவதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





