தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வந்துள்ளதால், தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) குறைக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 13,999 எம்பிபிஎஸ்/பிடிஎஸ் இடங்களுக்கான சேர்க்கையை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்துகிறது. நீட் முடிவுகள் வெளியாகும் முன்பே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஜூலை 23 அன்று முடிந்த முதல் காலக்கெடுவில் 70,488 பேர் விண்ணப்பித்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதில் சுமார் 2,100 விண்ணப்பங்கள் கூடுதலாக வந்தன. இதற்கிடையில், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 61,306 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதற்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பணிநிமித்தமாக பிற மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதியிருந்தாலும் தமிழக கவுன்சிலிங்கில் சேர தகுதி உடையவர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கவுன்சிலிங்கின்போது இருப்பிடச் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் சேர்க்கை வழங்கப்படும் என்றும் கூறினர்.

மேலும், தகுதி மதிப்பெண் பெறாத சிலரும் விண்ணப்பித்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களின் பெயர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறாது என்றும் தெரிவித்தனர். அதே நேரத்தில், சுயநிதி கல்லூரிகளில் இடங்கள் நிரம்பாத நிலை ஏற்பட்டால், நீட் தகுதி மதிப்பெண்ணை குறைத்து சேர்க்கை நடத்தும் வாய்ப்பு உள்ளது; இது கடந்த காலங்களிலும் நடைமுறையில் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.