திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படும் வழக்கில், மார்க்கண்டேயன் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 12:38 மணியளவில் முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோருடன் சிறைக்கு வந்த உதயநிதி, அங்கு மார்க்கண்டேயனை சந்தித்தார். பின்னர் மதியம் 1:05 மணியளவில் வெளியே வந்தார்.

தொடர்ந்து கே.டி.சி. நகரில் உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறையில் மார்க்கண்டேயன் தைரியமாக இருப்பதாகவும், அவரை ஜாமினில் வெளியே கொண்டு வர சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றஞ்சாட்டிய அவர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அவர்களது கட்சியினரே புகார் கூறினாலும் நடவடிக்கை இல்லை என்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை “சோபா” கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கும் பணியிலேயே அரசு கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவித்தார்.