புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. சில சந்தை பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால், அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை நிலையை மஞ்சளிலிருந்து ஆரஞ்சு வழியாக உயர்த்தி, மதியம் 12.25 மணிக்கு மிகக் கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கையை வெளியிட்டது. தலைநகர் முழுவதும் இடி, மின்னல் மற்றும் தீவிர மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்தது.
நொய்டா, காசியாபாத், குர்கான் பகுதிகளிலும் மிகக் கனமழை பதிவானது. கன்னாட் பிளேஸ், ஜன்பத், லுட்யன்ஸ் டில்லியின் சில சாலைகள், பாரத் மண்டபம் சாலை, பாரகம்பா சாலை, ஐ.டி.ஓ. மற்றும் அருகிலுள்ள மதுரா சாலை, காளிந்தி குஞ்ச் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பல சாலைச் சந்திப்புகளில் மழைநீர் அதிகமாக தேங்கியதால் வாகனப் போக்குவரத்து மந்தமானது. கிரேட்டர் கைலாஷ்-2 முதல் சாவித்ரி சினிமா வழியாக சிராக் டில்லி, ஹவுஸ் காஸ், ஆர்.கே.புரம் வரைவும், சங்கமம் விஹார் முதல் கான்பூர் நோக்கி எம்.பி. சாலை வழியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வானிலை நிபுணர்கள் கூறுகையில், தென்மேற்குப் பருவமழை புத்துயிர் பெற்றதுடன் பிற வானிலை அமைப்புகள் இணைந்ததே இந்தத் தொடர் மழைக்குக் காரணம். வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உள்நாட்டிற்குள் நகர்வதும், தென்மேற்கு ராஜஸ்தானின் மீது ஒன்றும், டில்லி அருகிலுள்ள மத்திய உத்தரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில் இன்னொன்றுமாக இரண்டு மேல்-காற்று சூறாவளி சுழற்சிகள் இருப்பதும், ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை தொடரக் காரணமாகும்; ஆகஸ்ட் 3 வரை பரவலான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





