எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தை தவறாக பயன்படுத்தி ஆதாரமற்ற கருத்துகளை முன்வைத்ததாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
புதுடில்லியில் அவர் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவமே நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். அப்படியிருக்க, அவையில் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை வன்மையாக கண்டிப்பதாகவும், அவை சான்றுகளால் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் கூறினார்.
மேலும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மசோதா அல்லது விவாதப் பொருளை குறித்து ராகுல் காந்தி பேசவில்லை என்றும், அவரது உரை முழுவதும் பொய்களின் தொகுப்பாக இருந்ததாகவும் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
குழந்தைகளின் நலனில் அரசு அக்கறை காட்டி வருவதாக கூறிய அவர், ராகுல் காந்தியின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தார். அவையிலும் நாட்டு மக்களிடமும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த கருத்துகள் தொடர்பான பதிவான நடவடிக்கைகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொய்யான கருத்துகளை அவையில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.





