ஐஐடி கான்பூரின் பிடெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காத ஒரு மாணவர், நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து கைப்பற்றி சில நேரம் முடக்கினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாடப்பிரிவுக்கான தேர்வில் மாணவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், ‘எத்திக்கல் ஹேக்கிங்’ மூலம் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. தேவையான அளவுகோலை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டது.

சேர்க்கை மறுக்கப்பட்ட பின்னர், தனது திறனை காட்டுவதற்காக அந்த மாணவர் இணையதளத்தை கைப்பற்றி, “எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே” என்ற செய்தியை பதிவிட்டதாக கூறப்படுகிறது. மாற்றப்பட்ட பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இணையதளம் கைப்பற்றப்பட்டதை அறிந்ததும் ஐஐடி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்க பரிசீலித்தது. ஆனால் இது சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவரால் செய்யப்பட்டதாக தெரிய வந்ததும், சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளாமல் முடிவு மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சேர்க்கை வழங்குவது வாய்ப்புக்காக ஹேக்கிங் செய்ததை நியாயப்படுத்துவது போலாகும்; அதே நேரத்தில் போலீஸ் வழக்கு மாணவரின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்பதால் புகார் அளிக்கவில்லை என ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும், அவரை தங்களின் சைபர் செக்யூரிட்டி மையத்தில் பணியமர்த்த முடிவு செய்து, அடுத்தாண்டு சேர்க்கைக்கு மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.