இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவதாக அறிவிக்கும் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் பகிர்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

பார்லிமென்டில் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, ஆண்டுக்கு குறைந்தது ரூ.100 கோடி வருமானம் என தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை 2021 முதல் 300%க்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறினார்.

அந்த எண்ணிக்கை 2025-26ல் 576 ஆக உயர்ந்துள்ளது. 2024-25ல் இது 415 ஆக இருந்த நிலையில், 2021-22ல் வெறும் 142 பேர் மட்டுமே ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் ஆண்டு வருமானம் என தெரிவித்திருந்தனர்.

ஆண்டு வாரியான போக்கில் 2022-23ல் 301 ஆக உயர்ந்து, 2023-24ல் 284 ஆக குறைந்தது. பின்னர் 2024-25ல் 415 ஆக மீண்டும் உயர்ந்து, 2025-26ல் மேலும் அதிகரித்து 576 ஆகியுள்ளது.

மேலும், கோடீஸ்வரர்களின் செல்வம் தொடர்பான தரவுகளை அரசு பராமரிப்பதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதே பதிலில், 2013-14 முதல் 2022-23 வரை 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.