அமைச்சர் கீர்த்தனாவுடன் கருத்து வேறுபாடு உள்ளது என்ற செய்திகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி மறுத்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பேசும்போது, அந்த வதந்திகளை ‘பொய்’ எனத் தெரிவித்தார்.

அரசு விழாவில் தன் பெயருக்கு முன் கீர்த்தனாவின் பெயர் இடம்பெற்றது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதாக கூறப்படும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இருவருக்கும் மோதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அப்போது அமைச்சர் கீர்த்தனாவின் கையை உயர்த்திப் பிடித்தபடி ஜெகதீஸ்வரி பேசினார். கீர்த்தனாவை தன் உடன்பிறந்த சகோதரியாக நினைப்பதாகவும், அவரும் தன்னை அக்காவாகக் கருதி பயணிப்பதாகவும் கூறி, தங்களின் ஒற்றுமையே அதற்குச் சாட்சி என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் பரவும் மோதல் குறித்த தகவல்கள் உண்மையல்ல என்றும், விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், போற்றுபவர்கள் போற்றட்டும்; தாங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.