அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு கருங்கல், ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தன் கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள் மற்றும் கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருப்பதைத் தான் அறிந்துள்ளதாக சதீஷன் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடையால் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இவை பிராந்திய இணைப்பை வலுப்படுத்தி சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய பொருளாதார மையங்களுக்கு அணுகலை அதிகரிக்கவும் இத்திட்டங்கள் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை நிலையான முறையில் மேலாண்மை செய்ய வேண்டிய அவசியத்தையும், கொள்கையின் பின்னணி நோக்கத்தையும் புரிந்துகொள்வதாக கூறிய சதீஷன், ஜல்லி கற்களை தடையின்றி கொண்டு செல்ல ஏற்ற வகையில் உரிய விலக்குகள் அல்லது நடைமுறை ஒன்றை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க முதல்வர் விஜயின் தலையீட்டை கேட்டுக்கொண்டுள்ளார். பதிலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.