அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை விளக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நர்மதா தாக்கல் செய்த மனுவில், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்டாலும் பல பெண்கள் அதை வெளிப்படுத்தாமல் ஆண் ஊழியர்களுக்கு இணையாக பணியாற்ற வேண்டிய சூழலில் வேலைக்கு வருகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் இருப்பதாகவும், தமிழகத்தில் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதவிடாய் விடுப்பு என்பது சலுகை அல்ல; அது பொதுச் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நல நடவடிக்கை என மனுதாரர் வலியுறுத்தினார். இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவில் உயர்நிலை குழுவை அமைக்க இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என்றும், முழு சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு கொள்கை உருவாக்க வலியுறுத்தி தலைமைச் செயலருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு வழக்கை விசாரித்தது. அரசு தரப்பில், இதற்கான விதிகளை உருவாக்கவும் தொழிலாளர் தொடர்பான விதிகளில் சேர்க்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள் விவரங்களை ஆகஸ்ட் 24க்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.





